மதுரையில் பல்வேறு மையங்களில் நடந்த குரூப்-2 தேர்வில் வினாத்தாள் குளறுபடி - தாமதமாக தொடங்கியதால் தேர்வு எழுதியவர்கள் அவதி
மதுரையில் பல்வேறு மையங்களில் நேற்று நடந்த குரூப்-2 தேர்வில் வினாத்தாள் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியது. இதனால் தேர்வுக்கு வந்திருந்தவர்கள் அவதி அடைந்தார்கள்.
மதுரையில் பல்வேறு மையங்களில் நேற்று நடந்த குரூப்-2 தேர்வில் வினாத்தாள் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியது. இதனால் தேர்வுக்கு வந்திருந்தவர்கள் அவதி அடைந்தார்கள்.
குரூப்-2 தேர்வு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் 2-ஏ முதன்மை தேர்வுகள் நேற்று நடந்தன. மதுரை மாவட்டத்தில் தேர்வுக்காக 35 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடந்தன. காலையில் நடந்த தேர்வில், கட்டாய தமிழ் மொழித்தாளுக்கும், மதியம் பொதுஅறிவுத்தாளுக்கும் தேர்வு நடந்தது. மேலும், தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்ணுக்கு ஏற்ப தனித்தனி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் தேர்வு எழுத 6718 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில், 6200 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். அதாவது 92 சதவீதம் பேர் தேர்வெழுதினர்.
மதுரை அரசினர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, லேடி டோக் கல்லூரி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார்.
வினாத்தாள் குளறுபடி
இந்த நிலையில், 15-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வர்களின் பதிவெண் மற்றும் வினாத்தாள் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது. மதுரை அரசினர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் சுமார் 550 பேர் தேர்வெழுத வந்திருந்தனர். ஆனால் வினாத்தாள் குளறுபடியால் காலை 10 மணி வரை தேர்வர்கள் தேர்வுக்கூட மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, வேறு சில தேர்வு மையங்களிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. காலை 10 மணிக்கு சரி செய்யப்பட்டு தேர்வர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். குளறுபடி ஏற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்களுக்கு அரை மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு மதியம் 1 மணி வரை தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். மதிய தேர்வை 6319 பேர் எழுதினர். இது 94 சதவீதம் ஆகும். இந்த தேர்வுக்கு 399 பேர் வரவில்லை.