மெஞ்ஞானபுரத்தில்கிறிஸ்தவர்கள் திடீர் உண்ணாவிரதம்
மெஞ்ஞானபுரத்தில் கிறிஸ்தவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரத்தில் பரி.பவுலின் ஆலயத்துக்கு முன்புறம் உள்ள இடத்தில் டேனியல் மனோகரன் என்பவர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் பா.ஜனதா கட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மெஞ்ஞானபுரம் கிறிஸ்தவ பொதுமகமை சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டால் தங்கள் வழிபாட்டிற்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறி நேற்று முன்தினம் டேனியன் மனோகரனிடம் தெரிவித்தனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் நேற்று ஆலயம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதனால் மெஞ்ஞானபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன் அங்கு சென்று, பொதுமகமைச்சங்க தலைவர் ஜெயபோஸ் மற்றும் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போலீசார் மேல் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என அவர் உறுதி அளித்ததின் பேரில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.