மொடக்குறிச்சி பகுதியில் 6 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை; 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
மொடக்குறிச்சி பகுதியில் 6 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 ேபர் உயிர் தப்பினர்.
மொடக்குறிச்சி பகுதியில் 6 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.
கொட்டி தீர்த்த மழை
மொடக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 1 மணி வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக மொடக்குறிச்சியை அடுத்த 46 புதூர் ஊராட்சி புதுவலசு, கருக்கம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி, கிழக்கு வலவு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இரவில் வெள்ளம் புகுந்ததால் வீட்டில் இருந்த பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். மேலும் வீடுகளில் உள்ள பொருட்கள் தண்ணீரில் மிதந்து சென்றன.
வீடு இடிந்து விழுந்தது
ஆனைக்கல்பாளையம் பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவருடைய வீட்டின் முன்புற அறை இடிந்து விழுந்தது. இதில் வாசுதேவன், அவருடைய மனைவி பழனியம்மாள், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் வீட்டின் உட்புற அறையில் தூங்கி கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினா்.
லக்காபுரம்- கருக்கம்பாளையம் செல்லும் சாலையில் மழை நீர் பெருக்ெகடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கருக்கம்பாளையத்தில் சென்ற ஒரு டிராக்டர் அந்த பகுதியில் உள்ள சேற்றில் வசமாக சிக்கி கொண்டது. இதைத்தொடர்ந்து சரக்கு வேன் மூலம் டிராக்டரை கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனர்.
முகாமில் தங்க வைப்பு
மழையால் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 170 பேர் 46 புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊராட்சி தலைவர் பிரகாஷ் காலை, மதியம், இரவு என 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கினார். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொடுமுடி இலுப்பை தோப்பு பகுதியில் 5 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 14 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தாசில்தார் மாசிலாமணி, கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணி, கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவிரிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தாளவாடி
தாளவாடி, சூசைபுரம், அருள்வாடி, மெட்டல்வாடி, பனக்கள்ளி, தலமலை, ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று மதியம் 12.30 மணி வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
இதனால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்த மழையால் தாளவாடிைய அடுத்த மல்லன்குழி ஊராட்சிக்கு உள்பட்ட சொத்தன்புரம் கிராமத்தில் சித்தராஜ் என்பவரின் வீட்டின் ஒரு பகுதி சுவர் நேற்று மேதியம் இடிந்து விழுந்தது. அப்போது அவருடைய மனைவி மற்றும் 2 மகள்கள் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் ஆசனூரில் பெய்த மழையால் அரேபாளையம்- கொள்ளேகால் சாலையை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர், நடுப்பாளையம், கொளாநல்லி, கருமாண்டம்பாளையம், கொளத்துபாளையம், சோளங்காபாளையம், பாசூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியில் இருந்து 1½ மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.