ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள முருகன், மாரியம்மன் கோவில் உண்டியல்கள் உடைத்து பணம் திருட்டு
ஈரோடு மூலப்பாளையத்தில் முருகன், மாரியம்மன் கோவில் உண்டியல்கள் உடைத்து பணம் திருடப்பட்டு உள்ளது.
ஈரோடு மூலப்பாளையத்தில் முருகன், மாரியம்மன் கோவில் உண்டியல்கள் உடைத்து பணம் திருடப்பட்டு உள்ளது.
உண்டியல் உடைப்பு
ஈரோடு மூலப்பாளையத்தில் பிரசித்திபெற்ற முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளது. இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவில் நடை காலையில் திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இதேபோல் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி கோவிலை பூட்டிச்சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் 2 கோவில்களிலும் பூசாரிகள் நடை திறப்பதற்காக சென்றனர். அப்போது 2 கோவில்களிலும் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதைத்தொடர்ந்து 2 கோவில்களின் பூசாரிகள் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தாலுகா போலீசார் மற்றும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கை பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.
மேலும் திருட்டு நடந்த கோவில்களுக்கு கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.