பெரும்பாலான இடங்களில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் முறையாக நடப்பதில்லை- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி


பெரும்பாலான இடங்களில்  100 நாள் வேலை திட்டப்பணிகள் முறையாக நடப்பதில்லை- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
x

பெரும்பாலான இடங்களில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் முறையாக நடப்பதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை


பெரும்பாலான இடங்களில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் முறையாக நடப்பதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தனிநபர் நிலத்தில் வேலை

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கு பொறுப்பாளராக இருப்பவர் விதிகளை மீறி பல மாதங்களாக அந்த பணியில் நீடித்து வருகிறார். மேலும் 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றுபவர்களை, தனிநபர்களுக்கு சொந்தமான நிலங்களில் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறார்.

ஊராட்சி நிர்வாகத்தினருடன் சேர்ந்து தனிநபருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பராமரிப்பது போன்ற வேலைகளில் 100 நாள் பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது, தவறான வழிமுறையாகும்.

ஆதாரங்கள் தாக்கல்

இதுசம்பந்தமாக உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் நேரில் ஆஜராகி, தாருகாபுரத்தில் தனிநபர்களுக்கு சொந்தமான நிலத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலை செய்தது சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் ஆதாரங்களை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் அதிருப்தி

அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வேலை செய்ததை மனுதாரர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். பெரும்பாலான இடங்களில் இத்திட்டத்தின் கீழ் பணிகள் முறையாக நடப்பதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை செயலாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். அவர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story