முக்காணியில் மரத்தில் லாரி மோதி காயமடைந்த டிரைவர் சாவு
முக்காணியில் மரத்தில் லாரி மோதி காயமடைந்த டிரைவர் இறந்து போனார்.
ஆறுமுகநேரி:
முக்காணியில் மரத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த டிரைவர் பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரத்தில் மோதியது
மேலதட்டப்பாறையைச் சேர்ந்த வண்ணார் சாமி மகன் செல்வம் (வயது 48). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஆறுமுகநேரியில் உப்பு லோடு ஏற்றுவதற்காக பழைய காயல் வழியாக ஆறுமுகநேரிக்கு லாரியை ஓட்டி சென்றார். லாரி முக்காணி பஜார் அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடிய லாரி, ஒரு மரத்தின் மோதியதுடன், அதை ஒட்டி இருந்த பர்னிச்சர் கடை மீதும் மோதி நின்றது.
3 பேர் படுகாயம்
இதில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. லாரியின் இடிபாடுகளில் சிக்கிய செல்வம் படுகாயம் அடைந்தார். மேலும் பர்னிச்சர் கடை அருகே நின்று கொண்டிருந்த முக்காணி தேவர் தெருவை சேர்ந்த பாப்பு(80), முக்காணி உச்சினி மகாளிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா (75) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
டிரைவர் சாவு
தகவல் அறிந்த வந்த ஆத்தூர் போலீசார் 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் டிரைவர் செல்வம் பரிதாபமாக இறந்து போனார். காயமடைந்த மற்ற 2 பேரும்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.