முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் புதுக்குப்பத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே முத்து மாரியம்மன் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த வேதமூர்த்தி என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பூஜை முடிந்ததும், வேதமூர்த்தி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார்.
அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு பதறிய அவர், கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தையும் காணவில்லை.
கேமராக்களை அடித்து நொறுக்கினர்...
இதுகுறித்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டனர். அப்போது கோவிலின் முன்பகுதி மற்றும் கோவிலுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவாகக்கூடிய ''ஹார்ட் டிஸ்க்''கையும் காணவில்லை. பின்னர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் முன்புள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.
தடயங்கள் சேகரிப்பு
பின்னர் உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடியுள்ளனர். தொடர்ந்து போலீசார் அடையாளம் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிச் சென்றது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து, திருட்டு சம்பவம் நடந்த கோவிலில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து, தடயங்களை சேகரித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலேயே கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.