நாகூரில், வெட்டாற்று பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


நாகூரில், வெட்டாற்று பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x

வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நாகூரில், வெட்டாற்று பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நாகூரில், வெட்டாற்று பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் சீரமைக்கும் பணி

நாகை-நாகூர் இடையே வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2008-2009-ம் ஆண்டு நாகை கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலைவழியாக நாகை, நாகூர், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன.

இந்த சாலையில் நாகூர் வெட்டாற்றின் குறுக்கே உள்ள பாலம் கடந்த 2020-ம் ஆண்டு சேதமடைந்தது. இதையடுத்து வெட்டாற்றின் பாலம் சீரமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

மத்திய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.10.62 கோடி மதிப்பில் பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணி காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் இந்த பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாகூர் மெயின் ரோட்டின வழியாக அனைத்து வாகனங்கள் செல்வதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழா

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நாகூர் வெட்டாற்று பாலம் சேதமடைந்ததால் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு, வாகனங்கள் நாகூர் மெயின் ரோடு வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா தொடங்குகிறது.

விரைந்து முடிக்க வேண்டும்

இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.

எனவே இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலையில் நாகூர் வெட்டாற்று பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story