நீலகிரி மாவட்டத்தில் பச்சைத்தேயிலை கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி- தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு
நீலகிரி மாவட்டத்தில் பச்சைத்தேயிலையின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால், அதற்கு தீர்வு காணும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்த சிறு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் பச்சைத்தேயிலையின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால், அதற்கு தீர்வு காணும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்த சிறு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கடும் வீழ்ச்சி
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இந்தத் தொழிலை நம்பி சிறு விவசாயிகள் மட்டுமின்றி, தோட்டத் தொழிலாளர்கள், தேயிலைத் தொழிற்சாலை பணியாளர்கள், வியாபாரிகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர். இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் நடந்த சில ஆண்டுகளாக தேயிலை விலை வீழ்ச்சி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் தேயிலை தொழிற்சாலைகளுக்கு சிறு விவசாயிகள் வழங்கும் தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காண்பதற்காகவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் கடந்த வாரம் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
அப்போது குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியம் சார்பில் விவசாயிகள் சங்கத்தினரிடம் 7 நாட்களுக்குள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் ஐ போஜன் கூறியதாவது:-
தேயிலைத்தூள் ஏலத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு வெறும் 12 ரூபாய் மட்டுமே கிடைத்து வருகிறது. கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மேலும் ரூ.8 வரை விலை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 16-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் எவ்விதமான போராட்டங்களை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.