ஊட்டியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
ஊட்டியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி கிடையாது. மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி
ஊட்டியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி கிடையாது. மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தீபாவளி பண்டிகை
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்த விருப்பம் உள்ளவர்கள் பட்டாசு உரிமம் பெற வெடிபொருள் சட்ட விதிகள் 2008-ன் கீழ் உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பட்டாசு கடைகளின் மேல்மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது. பட்டாசு எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதியில் கட்டிடங்கள், டீ கடை இருத்தல் கூடாது. பொது மக்கள் ௯டும் இடங்களான பஸ் நிறுத்தம் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிக்௯டம் அருகில் பட்டாசு கடை அமைத்தல் ௯டாது. பட்டாசு கடையின் கட்டிடத்தில் கண்டிப்பாக 2 வழிகள் இருக்க வேண்டும். அதில் அவசரகால வழி கடையில் இருந்து வெளியே செல்லும் வழியாக இருக்க வேண்டும்.
15 மீட்டர்
கட்டிடம் கான்கிரீட் மேற்கூரையாக அமைந்திருந்தால் சுற்றளவில் 15 மீட்டருக்கு அதே வகை பட்டாசு கடை இருக்க கூடாது. கட்டித்தின் பரப்பளவு வெடிப்பொருள் சட்டவிதிகள் 2008 விதியில் தெரிவித்துள்ளப்படி அதன் அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
காலி இடத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்கும் போது 50 மீட்டர் சுற்றளவுக்கு காலியிடம் மற்றும் 2 வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
பட்டாசு கடை வைக்க கூறும் இடத்திற்கு கதவு எண்ணுடன் கூடிய விலாசம் விண்ணப்பத்தில் இருக்க வேண்டும். திருமண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்கள் ஆகிய கட்டிடங்களில் பட்டாசு கடை அமைக்க கூடாது. மீறி செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடை உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது பட்டாசு கடை வைக்கப்படும் இடம் காலியானதாகவும் பொருட்கள் ஏதும் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும்.
பட்டாசு கடை உரிமம் வழங்கவும் பட்டாசு கடை வைக்க அனுமதி வாங்கி தருவதாகவும் கூறி யாராவது பணம் கேட்டால் 0423-2223828, அல்லது 9789800100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.