பழனிசெட்டிபட்டியில் சாலையை மறிக்கும் டிரான்ஸ்பார்மர்கள்; விபத்துகளுக்கு வித்திடும் விரிவாக்கப்பணிகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?


பழனிசெட்டிபட்டியில்  சாலையை மறிக்கும் டிரான்ஸ்பார்மர்கள்; விபத்துகளுக்கு வித்திடும் விரிவாக்கப்பணிகள்:  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

பழனிசெட்டிபட்டியில் சாலை விரிவாக்கப் பணிகளால் சாலையை மறிக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர்களால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி

சாலை விரிவாக்கப் பணிகள்

போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துகளை தவிர்க்க சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொச்சி-தனுஷ்கோடி சாலையில் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி உள்ளதால் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆண்டிப்பட்டி, க.விலக்கு, தேனி ஆகிய இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டியிலும் சாலையின் மையத்தில் இருந்த சிறிய அளவிலான தடுப்பு அகற்றப்பட்டு, உயரமான தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த சாலையும் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரான்ஸ்பார்மர்கள்

தற்போதே இந்த சாலை விபத்து அபாயம் நிறைந்த சாலையாக திகழ்கிறது. பூதிப்புரம் விலக்கில் இருந்து போடி விலக்கு வரை சுமார் 2 கிலோமீட்டர் இடைவெளியில் சாலையின் இருபுறமும் மொத்தம் 17 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இதில் சில மின்சார டிரான்ஸ்பார்மர்கள், முன்னே செல்லும் வாகனங்களை மறைக்கும் அளவுக்கு சாலையை ஒட்டி அமைந்துள்ளன. இவற்றில் 8 டிரான்ஸ்பார்மர்கள் விபத்து அபாயம் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளதோடு, சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தால் இவை சாலையின் நடுவே அமைய வாய்ப்புள்ளது.

சில இடங்களில் மின்கம்பங்கள், உயரழுத்த மின்கம்பங்களும் சாலையையொட்டி விபத்து அபாயத்துடன் அமைந்துள்ளன. இந்த டிரான்ஸ்பார்மர்களுக்கு பின்னால் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அத்தகைய காலியிடங்களில் அவற்றை மாற்றியமைத்தால் விபத்து அபாயம் நீங்கும். அதன் மூலம் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும், அந்த பணிகளுக்கு பின்பு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்கும்.

பரிந்துரை வரவில்லை

ஆனால் அந்த டிரான்ஸ்பார்மர்களை இடமாற்றி அமைப்பது தொடர்பாக இதுவரை அரசுத்துறைகள் சார்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றை மாற்றியமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின்வாரியத்துக்கு பரிந்துரையும் இதுவரை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதிக்கான மின்வாரிய உதவி பொறியாளர் உதயகாந்தியிடம் கேட்டபோது, "இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. சாலையோர மின்சார டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் நெடுஞ்சாலைத்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும். அதற்கான தொகையை நெடுஞ்சாலைத்துறை மின்வாரியத்துக்கு செலுத்தியதும் மின்வாரியம் சார்பில் உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

விபத்து அபாயம்

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி துணைத்தலைவர் மணிமாறன் கூறுகையில், "தற்போதே சாலையோரம் விபத்து அபாயம் நிறைந்துள்ளது. சாலை விரிவாக்கம் செய்வதற்காக தற்போது மையத் தடுப்புச் சுவர் உயரமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் இருபுறமும் அதிக அளவில் மின்சார டிரான்ஸ்பார்மர்கள் விபத்து அபாயத்துடன் உள்ளதால், அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கைகள் எழுந்தன.

எனவே தற்போது விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும் முன்பு டிரான்ஸ்பார்மர்களை விபத்து அபாயத்தை போக்கும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்க தயாராக உள்ளோம்" என்றார்.

தேனியை சேர்ந்த வணிகர் கமலக்கண்ணன் கூறுகையில், "இந்த சாலையில் அடிக்கடி சென்று வருகிறேன். தற்போதே விபத்து அபாயம் அதிகம் உள்ளது. டிரான்ஸ்பார்மர்களை மாற்றியமைத்தால் விபத்து அபாயம் குறையும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் இதுவே விபத்துகளை அதிகரிக்க காரணமாக அமைந்து விடும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.


Next Story