பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில்பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டப்பணிகூடுதல் கலெக்டர் மதுபாலன் ஆய்வு
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் மதுபாலன் ஆய்வு மேற்கொண்டார்.
பரங்கிப்பேட்டை,
ஆய்வு
பரங்கிப்பேட்டை ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் மதுபாலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ஒன்றிய அதிகாரிகளிடம் வீடுகள் கட்டுமான பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்கவும்வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து கூடுதல் கலெக்டர் மதுபாலன் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், சுகாதார வளாகம் அமைய உள்ள இடங்களையும் பார்வையிட்டதுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.
பள்ளி மாணவர்களிடம் குறைகள் கேட்பு
செல்லும் வழியில் அரியகோஷ்டியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது வீட்டை கல் சுவர் அமைத்து மேற்கூரை அமைத்துக்கொண்டிருந்தார். இதைபார்த்த கூடுதல் கலெக்டர் மதுபாலன் மேற்கூரை அமைத்துக் கொண்டிருந்த முதியவரிடம் சென்று, மேற்கூரை அமைக்க வேண்டாம் எனவும், உங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தருகிறோம் என கனிவுடன் கூறினார். அதற்கு முதியவர் தன்னிடம் வீடு கட்ட தேவையான இடம், பணம் இல்லை என்றார். அதற்கு கூடுதல் கலெக்டர் மதுபாலன் நீங்கள் செலவு செய்ய வேண்டாம். அரசு செலவில் வீடு கட்டி தரப்படும் என்றார். இருப்பினும் அந்த முதியவர் கான்கிரீட் வீடு வேண்டாம் என கூறிவிட்டாா். இதனை தொடர்ந்து மதுபாலன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று பள்ளி மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், சதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஒன்றிய பொறியாளர் சீனிவாசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.