பெரம்பலூரில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்


பெரம்பலூரில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்
x

பெரம்பலூர் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பெரம்பலூர்

கொன்றை மலர்கள்

கனிக்கொன்றை, சரக்கொன்றை என்று அழைக்கப்படும் கொன்றை மரங்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டவை. இம்மரங்களில் பங்குனி இறுதியில், சித்திரையில் பூ பூக்கும். தமிழ் புத்தாண்டில் பார்த்தால் ஆண்டு முழுவதும் வசந்தம் தங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், கலெக்டர் அலுவலக சாலை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

சில மரங்களில் இலைகளே தெரியாத அளவுக்கு மஞ்சள் நிறத்தில் அடர்ந்து காணப்படும் கொன்றை மலர்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன. அந்த மரத்தில் முருங்கைக்காய் வடிவத்தில் நீண்ட காய்கள் காய்த்து தொங்குவது பார்வையாளர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

மருத்துவ குணம்

கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விளையாட்டு அரங்க வளாகத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்களின் அருகே பொதுமக்களில் இளைஞர்கள், சிறுவர்கள் நின்று செல்போனில் படம் எடுத்து மகிழ்கின்றனர். பொதுவாக வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக காணப்படும் கொன்றை மரங்கள், சரம் சரமாக பூ பூக்கும் தன்மையுடையதால், சரக் கொன்றை என அழைக்கப்படுகின்றன. அதிக சூரிய ஒளி, மழைநீர் தேங்காத பகுதியில் நன்கு வளரக்கூடிய இந்த மரம், கோடை காலத்தில் தொடங்கி வசந்த காலம் வரையில் பூக்கும் தன்மை கொண்டது. இலக்கியங்களில் சிறப்பு பெற்ற கொன்றை மலர்கள், சங்க காலத்தில் முல்லை நிலத்துக்குரிய பூவாக கருதப்பட்டது.

கேரளா மக்களும் விசேஷ நாட்களில் கொன்றை மலர்களை கொண்டு அலங்காரம் செய்வதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். சிவபெருமானுக்கு உகந்த மலர் கொன்றை மலர் என்பதால், பல கோவில்களில் இம்மரங்கள் தல விருட்சமாகவும் உள்ளது. இம்மரங்களின் பூ, இலை மற்றும் பட்டைகளுக்கு மருத்துவ குணம் உள்ளதால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.


Next Story