பெரியகுளம் நகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் ரத்து
பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது
இடைத்தேர்தல் ரத்து
பெரியகுளம் நகராட்சியில் 26-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றவர் ராஜாமுகமது. பின்னர் அவர் நகர்மன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நகராட்சிக்கு சொந்தமான மீன் கடையை ஏலம் எடுத்து நடத்தி வந்ததை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த கவுன்சிலர் பதவி உள்பட தேனி மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராஜாமுகமது தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணையில், தகுதி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, பெரியகுளம் நகர்மன்ற 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
3 பதவிகளுக்கு தேர்தல்
இதற்கிடையே மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்க இருந்த மீதமுள்ள 8 பதவிகளில் 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கு மட்டும் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 3 பதவிகளுக்கு மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர், டி.வாடிப்பட்டி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர்.