பெரியகுளத்தில்இந்து அறநிலையத்துறை இடங்களில் அளவீடு பணி
பெரியகுளத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் அளவீடு பணி நடந்தது.
பெரியகுளத்தில் மலைமேல் வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில்களுக்கான இடங்கள் மற்றும் வீடுகள் வரதப்பர் தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு, அரண்மனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையம் உத்தரவின்பேரில், கோவில் நிலங்களை கண்டறிந்து, அவற்றை அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேனி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் செந்தில் முருகன் தலைமையில் அளவீடும் பணி நேற்று நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை தாசில்தார் யசோதா, கோவில் செயல் அலுவலர் ராமதிலகம், ஆய்வாளர் கார்த்திக், நிர்வாக அலுவலர் அகிலன் மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள் அளவீடு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த அளவீடு பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், பணி முடிந்த பிறகு அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் தென்கரை வைகை அணை சாலையில் வாடகை செலுத்தாததால் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.