பெரியகுளத்தில்தனியார் மதுபான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


பெரியகுளத்தில்தனியார் மதுபான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் உள்ள தனியார் மதுபான கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் மதுபான பார்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனியார் மதுபான கடைகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்ட பார்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் 3 தனியார் மதுபான கடைகளில் தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனலட்சுமி தலைமையில் பெரியகுளம் தாசில்தார் காதர்ஷெரிப், தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் அகிலன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனியார் மதுபான கடைகள் முறையான அனுமதி பெற்று செயல்படுகிறதா?, மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படுகிறதா?, ரசீது வழங்கப்படுகிறதா, போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த திடீர் ஆய்வால் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுபானம் வாங்க வந்த மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தனியார் மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story