ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
தர நிர்ணய சான்று வழங்குவது தொடர்பாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்,
தர நிர்ணய சான்று வழங்குவது தொடர்பாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
அரசு ஆஸ்பத்திரி
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் மையம் உள்பட பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளன. மேலும் கூடுதலாக பல்வேறு மருத்துவ உபகரணங்கள், வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தர நிர்ணய சான்று வழங்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
மத்திய குழுவினர் வருகை
இதனைதொடர்ந்து சான்று வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 2 பேர் கொண்ட மத்திய குழுவை சேர்ந்த டாக்டர் ரமேஷ் காமத்து தலைமையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அந்த குழு நேற்று வந்தது. இந்த குழுவினர் ஆஸ்பத்திரியில் உள்ள பல்வேறு வசதிகளையும், அங்கு வரும் நோயாளிகளுக்கு எந்த வகையில் சிகிச்சை அளிக்கிறார்கள்? நோயாளிகள் வந்தவுடன் என்ன செய்கிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தனர். இந்த ஆய்வுக்குழுவில் அறிக்கையின்படி ஆஸ்பத்திரிக்கு தர நிர்ணயச் சான்று வழங்கப்படும் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆய்வின்போது ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயாஸ், சூப்பிரண்டு டாக்டர் அருள் பிரகாஷ், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள் மற்றும் டாக்டர்கள் பலர் உடன் இருந்தனர்.