புஞ்சைபுளியம்பட்டியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட ஆசிய ஆக்கி கோப்பை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்பு
புஞ்சைபுளியம்பட்டியில் ஆசிய ஆக்கி கோப்பை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்துகொண்டாா்.
புஞ்சைபுளியம்பட்டி
ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டி வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே ஆசிய சாம்பியன்ஸ் ஆண்கள் ஆக்கி கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. கோப்பையை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து கோப்பை அங்கிருந்து ஊர்வலமாக கெ.ஓ.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி ஊர்வலத்தில் சிலம்பாட்டம் ஆடியும், ஸ்கேட்டிங் செய்தபடியும் ஏராளமான மாணவிகள் வந்தனர். ஊா்வலம் பள்ளிக்கூடத்தை சென்றடைந்ததும் மாணவிகளிடையே கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசினார்.