புஞ்சைபுளியம்பட்டி பகுதியில்ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை
நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், ஆணையாளர் செயது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அம்ருத் திட்டத்தில் 52 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது, ரூ.9லட்சம் மதிப்பில் 12, 13 ஆகிய வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து உப்பு தண்ணீர் அமைத்தல், நகராட்சிக்கு சொந்தமான ஜவகர் மெயின்ரோடு, சத்திரம் ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
தொடர்ந்து நடந்த உறுப்பினர்களின் விவாதம் குறித்த விவரம் வருமாறு:-
பி.ஏ.சிதம்பரம் (துணைத்தலைவர்) : நகராட்சிக்கு உள்பட்ட காலி இடத்தில் கடை வைத்து இருப்பவர்கள் வாடகை கட்ட தயாராக இருக்கின்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
துணைத்தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்: நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
ஆணையாளர் : விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
முறையான அறிவிப்பு
பூர்ண ராமச்சந்திரன் (தி.மு.க.): நகர்மன்ற கூட்டம் நடப்பது பற்றி நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு தான் தகவல் கொடுக்கின்றனர். கூட்டம் நடப்பது பற்றி முறையாக தகவல் தரவேண்டும்.
ஆணையாளர் : வருங்காலத்தில் நகராட்சி கூட்டம் நடப்பது பற்றி முறையாக அறிவிப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.