வருவாய்த்துறை ஆவணங்களில் நிலஉரிமையாளரின் புகைப்படம், ஆதார் எண்ணை இணைக்க கோரிக்கை
மோசடிகளை தடுக்க வருவாய்த்துறை ஆவணங்களில் நிலஉரிமையாளர்களின் புகைப்படம், ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மோசடிகளை தடுக்க வருவாய்த்துறை ஆவணங்களில் நிலஉரிமையாளர்களின் புகைப்படம், ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்க மாநில தகவல் தொடர்பு செயலாளர் சிவசங்கரராமன் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
ஆதார் எண்
தமிழகத்தில் மோசடி ஆவணங்களை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யலாம் என்ற சட்ட திருத்தத்தின் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பெரும்பாலும் போலியாக உருவக்கப்பட்ட வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் போலி அடையாள அட்டைகள் மூலம் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற அடிப்படையில்தான் மோசடி ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இது போன்ற நிலமோசடி மற்றும் நில அபகரிப்புகளால் உண்மையான சொத்தின் உரிமையாளர்களும், விவரம் அறியாத ஏழை, எளிய மக்களும் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர்.
ஆகையால் வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் இறப்பு சான்று, வாரிசு சான்று, கணினி பட்டா, நத்தம் பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா, கூட்டு பட்டா போன்ற ஆவணங்களில் நில உரிமையாளர்களின் புகைப்படம் மற்றும் ஆதார் அடையாள அட்டை எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
சிறப்பு முகாம்
கூட்டு பட்டாக்களில் நில உரிமையாளர்களின் புகைப்படம் மற்றும் ஆதார் அடையாள அட்டையை இணைத்தும் அவர்களுக்கு உரிய சொத்து விஸ்தீரணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும், மின் இணைப்புகளுடன் தற்போது ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுத்து இருப்பது போன்று நில உரிமையாளர்களின் ஆவண விவரங்களுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவகங்களிலும பத்திரப்பதிவு செய்ய வரும் ஆவணதாரர்களை ஆதார் அடையாள அட்டை மூலமாக மட்டுமே அடையாளம் கண்டு ஆவணப்பதிவு செய்வதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.