ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் 23-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்
தூத்;துக்குடி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் - 2023 (சாதாரண தேர்தல்) 23.06.2023 அன்று நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற அமைப்புகளில் திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஊரக பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும், நகர்ப்புற அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களும் வாக்காளர்களாக உள்ளனர். ஊரகத்துக்கு 7 திட்டமிடும் குழு உறுப்பினர்களும், நகர்ப்புறத்துக்கு 5 திட்டமிடும் குழு உறுப்பினர்களும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். ஊரக பகுதிகளுக்கான வேட்புமனுக்களை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலரான (ஊரகம்), மாவட்ட பஞ்சாயத்து செயலாளரிடமும், நகர்ப்புற பகுதிகளுக்கான வேட்புமனுக்களை உதவி தேர்தல் அலுலரான உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம்.இந்த வேட்புமனுக்கள் வருகிற 12-ந் தேதி(திங்கட்கிழமை) பரிசீலனை செய்யப்படும். வருகிற 14-ந் தேதி(புதன்கிழமை) மதியம் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
வாக்குப்பதிவு
வருகிற 23-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஊரக பகுதிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூட்ட அரங்கிலும், நகர்புற பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு மாலை 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 24-ந் தேதிக்கு முன்பு தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அரசு அறிவிக்கும் நாளில் இருந்து, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பின் காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.