தேனி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் 77 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
தேனி மாவட்ட கிராமப்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் 77 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஜல் ஜீவன் திட்டம்
'நீரின்றி அமையாது உலகு' என்றார் திருவள்ளுவர். தண்ணீர் என்பது அனைத்து உயிர்களின் ஜீவாதார தேவை. நீர் இல்லாமல் இந்த உலகில் எந்த உயிரினமும் நிலைப்பெற்று வாழ முடியாது. இயற்கையின் அருட்கொடையான தண்ணீரை அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் பெரும்பணியை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்கள் தோறும் குடிநீர் தொட்டிகள் கட்டி, தெருக்கள் தோறும் பொது குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. வசதி படைத்த சிலரின் வீடுகளில் மட்டுமே தனியாக குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. இதனால், தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போது பெண்கள் சண்டை போட்டுக் கொண்ட சம்பவங்களும் நடந்தன. இதுபோன்ற சில குழாயடி சண்டைகள் வன்முறைகளிலும் முடிந்துள்ளன. மக்களும் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்து பொது குழாய்களில் குடிநீர் பிடித்து வந்தனர்.
இந்நிலையில் கிராமப்புற பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி, ஜல் ஜீவன் மிஷன் என்று அழைக்கப்படும் உயிர்நீர் இயக்கம் என்ற திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு நபருக்கும் குறைந்தது 55 லிட்டர் குடிநீராவது வழங்க வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது.
தமிழகம் முதலிடம்
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலம் என்று தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருதை சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார்.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கடமலை-மயிலை, ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகள் அதிக வறட்சியான பகுதிகள். இங்கு கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. அந்த பகுதிகளில் இந்த ஆண்டு தான் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. மற்ற 6 ஒன்றியங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் முடிந்து விட்டன. எனவே, ஆண்டிப்பட்டி, கடமலை-ஒன்றிய பகுதிகளிலும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுபோல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள சில ஊராட்சிகளிலும் கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
77 ஆயிரம் வீடுகள்
தேனி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் மொத்தம் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மொத்தம் 607 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 315 வீடுகள் உள்ளன. இதில், ஜல் ஜீவன் திட்டம் தொடங்குவதற்கு முன்பு 54 ஆயிரத்து 638 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது.
மாவட்டத்தில் இதுவரை ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 77 ஆயிரத்து 503 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 53 ஆயிரத்து 174 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க வேண்டும். 2022-2023-ம் நிதியாண்டில் இந்த பகுதிகளுக்கும் முழுமையாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் பெரியகுளம், தேனி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் ஆகிய 6 ஒன்றிய பகுதிகளில் 80 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் பெரியகுளம் ஒன்றியத்தில் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேனி ஒன்றியத்தில் 99.99 சதவீதம், போடியில் 99.40 சதவீதம், உத்தமபாளையத்தில் 99.51 சதவீதம், சின்னமனூரில் 99.55 சதவீதம், கம்பத்தில் 98.75 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடமலை-மயிலை
கடமலை-மயிலை, ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் 2022-23-ம் நிதியாண்டில் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தேவையான இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டியும், உறைகிணறுகள் அமைத்தும், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் குடிநீர் எடுத்து வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் சுருளிப்பட்டியை சேர்ந்த குடும்பத்தலைவி பிரியா கூறுகையில், "எங்கள் வீட்டுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடு தேடி வந்து குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தனர். இதற்கு டெபாசிட் தொகை குறைவு என்பதால் எளிதில் இணைப்பு பெற முடிந்தது. அதற்கு முன்பு வரை பொது குழாய்களிலும், பக்கத்து வீடுகளிலும் குடிநீர் பிடித்து வந்தோம். தற்போது நிம்மதியாக சொந்த வீட்டிலேயே குடிநீர் பிடித்து பயன்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. கோடை காலத்திலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்" என்றார்.
சங்கராபுரத்தை சேர்ந்த சிந்தியா கூறுகையில், "ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் எங்கள் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. முன்பெல்லாம் தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலைமை இருந்தது. கோடை காலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.