சேலத்தில், மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்; 215 பேர் கைது
சேலத்தில், மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 215 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
விலைவாசி உயர்வு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலம் கோட்டை பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ராமன் முன்னிலை வகித்தார்.
மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மறியல் போராட்டம்
இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் அசோகன், வெங்கடேசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 215 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டு சாலமைறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.