சேலத்தில் எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழாவில் அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்-பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று திரளான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
அலகு குத்தி ஊர்வலம்
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 21-ந் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செயய்ப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலமும், சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான அலகு குத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
பின்னர் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மதியம் 12 மணியளவில் குமாரசாமிப்பட்டி, வின்சென்ட், அஸ்தம்பட்டி பகுதியில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் என பலர் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பக்தர்கள் தரிசனம்
காந்திரோடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் பக்தர்கள் விமான அலகு குத்தி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். திருவிழாவையொட்டி, வின்சென்ட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அக்னி கரகமும், பூங்கரகத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று அக்னி குண்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி குண்டம் இறங்குதல் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக காலை 8 மணியளவில் அம்மன் திருக்கல்யாணமும், அதைத்தொடர்ந்து அக்னி குண்டம் அமைக்கும் பணியும் நடக்கிறது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்மன் பக்தர்களுடன் சின்னதிருப்பதி சென்று மஞ்சள் நீராடி, மஞ்சள் ஆடை அணிந்து வீதி உலா வரும் நிகழ்ச்சியும், பின்னர் பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பால்குட ஊர்வலம்
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை மறுநாள்(சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி முக்கிய வீதிகளில் சுவாமி ஊர்வலம் செல்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.