சாத்தான்குளத்தில்கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல்
சாத்தான்குளத்தில் கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தட்டார்மடம்:
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் தெருவைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் ஆரோக்கிய ஜூலியன் (வயது 34). இவர் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ள அகஸ்டின் என்பவரது இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அகஸ்டின் இந்த இடத்தை காலி செய்ய கூறியதால், அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு கண்காணிப்பு கேமிரா மற்றும் சுத்திகரிப்பு எந்திரத்தை உடைத்ததாக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோக்கிய ஜூலியன், வக்கீலான அவரது மனைவியை நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார். நீதிமன்றம் எதிரே உள்ள டீ கடை முன்பு சென்றபோது, அங்கு வந்த அகஸ்டின், செல்வ ஸ்னோவின், செல்வசெல்வின் ஆகியோர் கணவன், மனைவியை வழி மறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆரோக்கிய ஜூலியன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.