சத்தியமங்கலத்தில்காங்கேயம் காளை மாட்டு வண்டிகளில் சென்ற மணமக்கள்வியந்து பாா்த்த பொதுமக்கள்
சத்தியமங்கலத்தில் காங்கேயம் காளை மாட்டு வண்டிகளில் சென்ற மணமக்களை பொதுமக்கள் வியந்து பாா்த்தனா்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் திருமணம் முடிந்ததும் காங்கேயம் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை வியந்து பொதுமக்கள் பார்த்தனர்.
திருமணம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 27). எம்.பி.ஏ. முடித்து உள்ளார். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் காங்கேயம் காளைகளை ஹரிபிரசாத் வளர்த்து பராமரித்து வருகிறார்.
இதேபோல் கடத்தூரை சேர்ந்தவர் சிந்து (25). பி.இ. முடித்து உள்ளார். ஹரிபிரசாத்துக்கும், சிந்துவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில் அத்தாணி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திருமணம் நேற்று நடைபெற்றது.
மாட்டு வண்டியில்...
திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் இருந்து ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த காங்கேயம் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் மணமக்கள் ஏறினர். இதையடுத்து மாட்டு வண்டியை மணமகன் ஹரிபிரசாத் ஓட்ட, அவருடன் மணமகளும் சென்றார். 2 பேரும் மாட்டு வண்டியில் நின்றபடியும், அமர்ந்தபடியும் மண்டபத்தில் இருந்து தென்றல் நகர் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் மண்டபத்துக்கு மாட்டு வண்டியில் திரும்பினர். மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பார்த்து ரசித்ததுடன், கையசைத்து தங்களுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டனர்.
இதுகுறித்து மணமகன் ஹரிபிரசாத் கூறுகையில், 'கொங்கு கலாசாரம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. எனவே அதை நினைவூட்டுவதற்காகவே நாங்கள் காங்கேயம் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் வந்தோம். ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் காங்கேயம் காளைகளை வளர்க்க வேண்டும்,' என்றார்.