சத்தியமங்கலத்தில் ஆற்றில் குதித்து ஆசிரியர் தற்கொலை
சத்தியமங்கலத்தில் குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசிரியர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அக்ரஹாரம் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி விக்னேஷ்வரி (39). இவர்களுடைய மகள் ரிதம் தன்வந்திரிக்கா (8).
விக்னேஷ்வரியின் தாய் வீடு சேலத்தில் உள்ளது. அதனால் அங்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம் என்று கணவரை அழைத்துள்ளார். ஆனால் சீனிவாசன் தனக்கு விடுமுறை இல்லை என்று மறுத்து விட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக கணவன்-மனைவிக்கிடையே கடந்த 22-ந் தேதி தகராறு ஏற்பட்டு உள்ளது.
காணவில்லை
இதைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி அதிகாலை விக்னேஷ்வாி படுக்கையை விட்டு எழுந்தபோது கணவரை காணவில்லை. எங்காவது வெளியே சென்று இருப்பார் என்று நினைத்தார். ஆனால் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்ப வில்லை.
அதனால் பதறிப்போய் உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டு பிடித்து தரவேண்டும் எனவும் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
உடல் மிதந்தது
இந்தநிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய கலையனூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் சீனிவாசனின் உடல் மிதந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த சீனிவாசன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து பவானி ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.