பள்ளி, கல்லூரி வளாக பகுதிகளில் கஞ்சா விற்பனை-பயன்பாடு இருந்தால் தகவல் கொடுக்கலாம்: போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்
தேனி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதோடு, அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்தும் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாகவும், மாணவர்களை போல் ஊடுருவி பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திலேயே விற்பனையில் ஈடுபட முயற்சி செய்து வருவதாகவும் போலீசாருக்கு தகவல்கள் வருகின்றன. எனவே பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் அல்லது அதற்கு அருகில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டால், அந்த தகவல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர், ஊழியர்கள், பொதுமக்கள் யாராக இருந்தாலும் தயக்கமின்றி போலீசாருக்கு தெரிவிக்கலாம். தேனி மாவட்டத்தில் இதுபோன்ற தகவல்களை 93440-14104 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இத்தகவலை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.