பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட இடங்களில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்


பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட இடங்களில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
x

பழுதடைந்த நிலையில் பள்ளிக்கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் புதிய பள்ளிக்கட்டிடங்கள் கட்ட வேண்டும் என குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

குடியாத்தம்

பழுதடைந்த நிலையில் பள்ளிக்கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் புதிய பள்ளிக்கட்டிடங்கள் கட்ட வேண்டும் என குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஒன்றியக்குழு கூட்டம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், துணைத்தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனோகரன், குட்டி வெங்கடேசன், சுரேஷ்குமார், தியாகராஜன், ரஞ்சித் குமார், சரவணன், தீபிகா உள்பட உறுப்பினர்கள் பேசியதாவது:-

ராமாலை நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

கருணீகசமுத்திரம் ஏரி நிரம்பினால் ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வளத்தூர் ஏரி நிரம்பி செல்லும்போது ஒரு சாலை துண்டிக்கப்படுகிறது.

எனவே அங்கு பாலம் அமைக்க வேண்டும். முக்குன்றம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் மழை நீர் ஒழுகுகிறது. மழை பெய்தால் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் பள்ளி கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும்.

மாற்ற வேண்டும்

குடியாத்தம் கால்நடை மருத்துவமனையை கொண்டசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும். அந்த இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும், ஒன்றிய குழு கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகள் வரவேண்டும்.

இவ்வாறு பேசினர்.

உறுப்பினர் இமகிரிபாபு பேசும்போது வள்ளலார் நகரில் தெருவின் நடுவே மூன்று மின்கம்பங்கள் உள்ளதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் வருவதற்கு கூட வழியில்லை. மின்கம்பங்களை அகற்ற சொந்த நிதியில் ரூ.50 ஆயிரம் செலுத்தி 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அகற்றப்படவில்லை என்றார்.

ராமாலை பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தீர்மானங்களை கொண்டு வந்தார். அதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பல கிராமங்களில் பாலங்கள் துண்டிக்கப்பட்டு சாலைகள் பழுதடைந்தது.

அதை தவிர்க்கும் பொருட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பழுதடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

அதனை தடுக்கும் பொருட்டு ஏரிக்கரையை பலப்படுத்தி நடைப்பாதை அமைக்க வேண்டும், சீவூர்-மூங்கப்பட்டு இடையே பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story