பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தால் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு


பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தால் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம்  கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
x

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைபொருள் பயன்பாடு இருந்தால் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைபொருள் பயன்பாடு இருந்தால் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

போதை பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசியபோது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 240 பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு மாணவர் சங்கம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு மாணவர் சங்கம் அமைத்து அதன் மூலமும், ஆசிரியர்கள் மூலமும் போதைப்பொருள் இல்லாத பள்ளி, கல்லூரி வளாகத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் முழு முயற்சியுடன் ஒத்துழைக்க வேண்டும்.

வாட்ஸ்அப் உதவி எண்

மேலும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7010363173 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இந்த எண்ணில் தொடர்பு கொள்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

எனவே ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சமின்றி இந்த எண்ணில் தகவல் அளிக்கலாம். கிராம அளவிலான குழு கூட்ட விவாதத்தில் மைய கருப்பொருளாக போதைப்பொருள் எதிர்ப்பு உதவி எண்ணை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு பொது அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் இந்த உதவி எண்ணை சுவர்களில் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விரிவான அறிக்கை

அதோடு மாதம் ஒரு முறை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒவ்வொரு மாத ஆய்வுக் கூட்டத்திலும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story