பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின
பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின.
பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வுகள் நேற்று தொடங்கி 27-ந் தேதிவரை நடக்கிறது.
காலாண்டு தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. அனைத்து அரசுப்பள்ளிக்கூடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.
நேற்று தமிழ் தேர்வு நடந்தது. வினாத்தாள்கள் அனைத்தும் தேர்வுக்கு முந்தைய நாள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளிக்கல்வித்துறை சென்னை அலுவலகத்தில் இருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
கேள்வித்தாள்
அவற்றை சரியான நேரத்துக்கு பதிவிறக்கம் செய்து, பள்ளிக்கூடங்களில் உள்ள பிரிண்டர்கள் மூலம் கேள்வித்தாள் அச்சிட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று நடந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் நேற்று முன்தினம் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது.
நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் ஆங்கிலத்தேர்வுக்கான வினாத்தாள்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதுபோல் தினசரி அனுப்பப்பட உள்ளது.
ஆன்லைன்
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தேர்வுகள் இன்று (புதன்கிழமை) தொடங்குகின்றன. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரிய-ஆசிரியைகளின் செல்போன்களில் குறிப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு கேட்கப்படும் கேள்விகளை படிக்கச்செய்து, அவர்கள் கூறும் பதிலை பதிவேற்றம் செய்ய வேண்டும். 4 மற்றும் 5-ம் வகுப்புக்கும் இதுபோன்ற ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வழக்கம்போல விடைத்தாளில் எழுதும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கும் நேற்று தேர்வு தொடங்கியது. அனைத்து வகுப்புகளுக்கும் மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டது. தேர்வுகள் 27-ந் தேதி நிறைவடைகிறது. 28-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறையாகும்.