சேதுபாவாசத்திரத்தில், கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள்
தடைகாலத்திற்கு பிறகு சேதுபாவாசத்திரத்தில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து விசைப்படகுகளில் வலை-தளவாட பொருட்களை ஏற்றும் பணி நடந்து வருகிறது.
சேதுபாவாசத்திரம்:
தடைகாலத்திற்கு பிறகு சேதுபாவாசத்திரத்தில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து விசைப்படகுகளில் வலை-தளவாட பொருட்களை ஏற்றும் பணி நடந்து வருகிறது.
மீன்பிடி தடைகாலம்
மீன் இனப்பெருக்க காலம் என கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி நள்ளிரவு வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள் அனைத்தும் மராமத்து செய்யப்பட்டன. நேற்றுடன் தடைகாலம் நிறைவடைந்தாலும் இன்று(வியாழக்கிழமை) என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.
கடலுக்கு செல்ல ஆயத்தம்
நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் தான் கடலுக்கு செல்ல முடியும்.
எனவே வருகிற 17-ந்தேதி சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு செல்வதற்காக விசைப்படகுகளில் டீசல் மற்றும் தளவாட பொருட்களை ஏற்றி மீனவர்கள் தயாராகி வருகின்றனர். 61 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.