சீர்காழியில், கடைஅடைப்பு போராட்டம்
மத்திய அரசை கண்டித்து சீர்காழியில், கடைஅடைப்பு போராட்டம் ஜெயின் சங்கம் சார்பில் நடந்தது.
சீர்காழி:
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஷிகர்ஜி மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள பாலிதானா ஆகிய ஜெயின் சமூகத்தினரின் புனித தலங்களை சுற்றுலா தலமாக மாற்ற அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும், அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஜெயின் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து மணி கூண்டு அருகில் உள்ள ஜெயின் சங்க கட்டிடத்தில் இருந்து ஜெயின் சங்கத்தலைவர் தலைமையில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சீர்காழி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் அமைதி ஊர்வலம் நடந்தது. மகாதான தெருவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.