தெற்கு கோனார்கோட்டையில் விவசாயி மனைவி தூக்கு போட்டு தற்கொலை


தெற்கு கோனார்கோட்டையில் விவசாயி மனைவி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 2:51 PM IST)
t-max-icont-min-icon

தெற்கு கோனார்கோட்டையில் விவசாயி மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

தெற்கு கோனார்கோட்டையில் கடன்தொல்லையால் மனமுடைந்த விவசாயி மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த வீரய்யா மகன் ராமசாமி (வயது 35). விவசாயி. இவரது மனைவி சுப்புலட்சுமி. தம்பதியருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஊருக்கு அருகில் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் பருத்தி, சோளம் போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், விவசாயத்தில் இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக இவர்கள் சிலரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளனர்.

கடன் பிரச்சினை

இ்ந்த ஆண்டும் விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லையாம். இதனால் கடன்காரர்களுக்கு வாங்கி கடனை திருப்பி கொடுக்க முடியவில்லையாம். கடன் கொடுத்தவர்களும் அடிக்கடி திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவரும் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டில் உள்ள சமையல் அறையில் சுப்புலட்சுமி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிதுநேரத்தில் கண்விழித்து பார்த்த கணவரும், குழந்தைகளும் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ வீட்டிற்கு கயத்தாறு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் விவசாயி மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story