ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கருகும் வாழைகளை பாதுகாக்க பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கருகும் வாழைகளை பாதுகாக்க பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 341 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து இருந்த இடத்துக்கு நேரடியாக சென்று கலெக்டர் மனுக்களை வாங்கினார்.
கருகும் வாழைகள்
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் புவிராஜ் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் உள்ள பேய்க்குளம், குலையன்கரிசல், பொட்டல்குளம், ஆறுமுகமங்கலம், கொற்கை உள்ளிட்ட குளங்களில் 3 மாதங்களுக்கு முன்பாகவே தண்ணீர் இல்லாத காரணத்தால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு உள்ள வாழை மற்றும் பல்வேறு பயிர்கள் கருகி வருகின்றன. ஆடு, மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன. தற்போது பருவமழை காரணமாக அணையின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. ஆகையால் கருகி வரும் வாழைகளை பாதுகாக்கவும், குடிநீர் இன்றி தவிக்கும் கால்நடைகளை காப்பாற்றவும், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பயிர் காப்பீடு
கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் விவசாயிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 2021-22-ம் ஆண்டு புதூர் கோவில்பட்டி வட்டாரத்தில் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி வெங்காயம், மிளகாய், மல்லி போன்றவை பயிரிட்டனர். இந்த பயிர்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டது. இதற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிற. கடந்த வாரம் மக்காச்சோளத்துக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் வவ்வால்தொத்தி, நாகலாபுரம் ஆகிய கிராமங்கள் விடுபட்டு உள்ளன. ஆகையால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். அதே போன்ற மற்ற பயிர்களுக்கும் மழைக்காலத்துக்கு முன்பு பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 8-வது வார்டு திரேஸ்புரம் மாதவநாயர் காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தீர்த்தக்கரை விநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு அதிக அளவில் மக்கள் வந்து வழிபட்டு சென்றனர். இந்த நிலையில் கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த கோவிலை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திரேஸ்புரத்தை சேர்ந்த சில மீனவர்கள் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர் அவர்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.