மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கண்டன ஊர்வலம்-வங்கியை முற்றுகையிட்ட 19 பேர் கைது
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தேனியில் கண்டன ஊர்வலம் மற்றும் வங்கி முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டன ஊர்வலம்
டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் தேனியில் கண்டன ஊர்வலம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.
இந்த கண்டன ஊர்வலம் தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கியது. மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரை ஊர்வலம் நடந்தது. பின்னர் வங்கியை முற்றுகையிட்டனர். இந்த ஊர்வலத்துக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
19 பேர் கைது
போராட்டத்தின் போது, பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வேண்டும், போராட்டம் நடத்தியதால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் வாலிபர் சங்க நிர்வாகிகள் நாகராஜ், பிரேம்குமார், முத்துக்குமார், மாதர் சங்க மாவட்ட தலைவி மீனா, மாவட்ட நிர்வாகிகள் வெண்மணி, அம்சமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 7 பெண்கள் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமை தாங்கினார். அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க பொறுப்பாளர் திவ்யா, இளைஞர் சங்க அகில இந்திய செயலாளர் அமர்ஜித்குமார், மாநில தலைவர் ராஜகோபால் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.