தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை - ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ரூ.8 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலை வசித்தார். வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
ஈரோடு அவ்வையார் வீதி, பாரிவீதி பகுதி, கோவலன் வீதி, ராஜாஜி வீதி, கட்டபொம்மன் வீதி, எம்.எஸ்.கே.நகர், ஸ்ரீ கார்டன் பகுதி, ரெயில் நகர், திருமலை கார்டன் பகுதி, வித்யா நகர், வேலன்நகர், கந்தையன் தோட்டம், கூட்டுறவு காலனி, செங்குந்தபுரம், வாசவி நகர், ராஜீவ்நகர் ஆகிய பகுதிகளில் புதிய தார்ரோடு போடும் பணி, குறிஞ்சிநகர், அம்மன் நகர் மற்றும் ஆர்.என்.புதூர் அமராவதி நகர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
500 டாஸ்மாக் கடைகள்
முன்னதாக அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கள்ளச்சாராயத்தை தடுக்க முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதில் சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்காக இலக்கு நிர்ணயிப்பதில்லை. தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை மேயர் செல்வராஜ், மாநகர பொறியாளர் விஜயகுமார், தாசில்தார் ஜெயக்குமார், ஒப்பந்ததாரர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.