தஞ்சையில், 945 தொழிலாளர்களுக்கு ரூ.18 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தஞ்சையில், 945 தொழிலாளர்களுக்கு ரூ.18 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தஞ்சையில் 945 தொழிலாளர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கணேசன், அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
தொழிலாளர் நலத்துறை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு கொறடா கோவி.செழியன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.
அமைச்சர் கணேசன் பேச்சு
பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:
கடந்த ஆட்சி காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் தற்போது ஓராண்டு காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடாமலேயே அவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்ட ரூ.4 லட்சம் வரை மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதே போல் அவர்கள் பாதுகாப்பாக பணியாற்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
ரூ.369 கோடி நலத்திட்ட உதவிகள்
இதுவரை 4 லட்சத்தி 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.369 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 43 தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியத்துக்கான ஆணையும், 179 பேருக்கு கல்வி உதவித் தொகை உள்பட 945 பேருக்கு ரூ.18.08 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே பாதுகாப்பாக தொழிலாளர்கள் பணியாற்றி, தங்களையும், தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தொழிலாளர் உதவி ஆணையர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் செயலாளர் செந்தில்குமாரி வரவேற்றார். முடிவில் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் நன்றி தெரிவித்தார்.