தட்டார்மடம் பகுதியில் பொது இடங்களில் வரையப்பட்ட சாதி அடையாளங்கள் அழிப்பு
தட்டார்மடம் பகுதியில் பொது இடங்களில் வரையப்பட்ட சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டன.
தட்டார்மடம்:
தட்டார்மடம் பகுதியில் அரசு சுவர்கள், பொதுஇடங்களில் வரையப்பட்டு இருந்த சாதி அடையாளங்களை அழித்த கிராம மக்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
சமூக விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி அனைத்து பகுதியிலும் போலீசார் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதியிலும் சாதி மோதல்கள், பிரச்சினைகளை ஒழிக்கும் வகையில் அரசு சுவர்கள் மற்றும் கிராமங்களிலுள்ள பொதுஇடங்களில் உள்ள சாதி அடையாளங்களை அழிக்கும் பணியில் போலீசார் முன்னிலையில் பொதுமக்களே ஈடுபட்டு வருகின்றனர்.
சாதி அடையாளம் அழிப்பு
இதேபோன்று தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட வழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, படுக்கபத்து, கொம்மடிக்கோட்டை, தட்டார்மடம், தாமரைமொழி பஞ்சாயத்து பகுதி கிராமங்களில் பொது இடங்களில் இருந்த சாதி அடையாளங்களை அழிக்கும் பணி நடந்தது.
அதன்படி, இப்பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள மின் கம்பங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அரசு சுவர்கள், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பொதுஇடங்களில் இருந்த சாதி அடையாளங்கள் ஊர்த்தலைவர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் அந்தந்த பகுதி கிராமமக்கள் வெள்ளை நிற பெயின்டால் அழித்தனர்.
போலீசார் பாராட்டு
சாதி அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களை, தட்டார்மடம் போலீசாரும், போலீஸ் சூப்பிரண்டும் பாராட்டினர்.