தஞ்சையில், 3 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
தஞ்சையில், 3 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
கோவையில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
கார் சிலிண்டர் வெடிப்பு
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானர். இது தொடர்பாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீடுகளில் நேற்று அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் சோதனை நடத்தினர்.
அதன்படி தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள 3 பேரின் வீடுகளில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன்(தஞ்சை கிழக்கு), சந்திரா(தஞ்சை மேற்கு), ரமேஷ(தஞ்சை தெற்கு) ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
1 மணி நேரம்
இந்த சோதனையின்போது அவர்களுக்கு வேறு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர்.
சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.