ஆண்டிப்பட்டியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ2½ கோடி நிலம் மீட்பு
ஆண்டிப்பட்டியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி கடைவீதியில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ளது. இதில் பெரும்பகுதி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையத்தின் உத்தரவின் பேரில், கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆண்டிப்பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 4224 சதுர அடி நிலம் கோவில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும். இதையடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) யசோதா, பெரியகுளம் சரக ஆய்வாளர் கார்த்திகேயன், செயல் அலுவலர் ஹரிஷ் குமார், நில அளவையர்கள் சரவணன், அன்னகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை வைத்தனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை யாரும் ஆக்கிரமிக்கவோ, அபகரிக்கவோ கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விரைவில் பொது ஏலம் மூலம் இந்த நிலம் குத்தகைக்கு விடப்பட உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.