விஷச்சாராய கொலை வழக்கில்; கைதான 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல்
மரக்காணம் விஷச்சாராய கொலை வழக்கில் கைதான 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் வினியோகம் செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி மற்றும் சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி, மரக்காணம் கரிப்பாளையத்தை சேர்ந்த மதன் ஆகிய 12 பேர் மீது போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் மதனை தவிர மற்ற 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.
11 பேரை காவலில் விசாரிக்க மனு தாக்கல்
இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து இவ்வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, மரக்காணம் போலீஸ் நிலைய குற்ற வழக்கு எண்ணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் குற்ற வழக்கு எண்ணாக மாற்றி 12 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து, இவ்வழக்கில் கைதான 11 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, இம்மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என தெரிவித்தார்.