தொழிலாளியை கொன்ற வழக்கில் வாலிபர் கைது


தொழிலாளியை கொன்ற வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே கோவில் கொள்ளையை தடுக்க முயன்ற தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே கோவில் கொள்ளையை தடுக்க முயன்ற தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவிலில் கொள்ளை

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வெட்டுமடையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 16-ந் தேதி நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் குத்துவிளக்குகளை திருடி சென்றனர். இதுதவிர அன்றைய தினம் பெட்ரோல் பங்கில் தூங்கிய ஊழியர்களிடம் இருந்தும் செல்போன்கள் திருடு போய் இருந்தது.

மேலும் வெட்டுமடை கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கணேசன் (வயது 55) என்பவர் முகத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை மறுநாள் அதிகாலையில் அங்கு வந்த பூசாரி வேலாயுதன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தாக்கப்பட்ட தொழிலாளி சாவு

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கோவில் கொள்ளையை தடுக்க முயன்ற போது கொள்ளையர்கள் தாக்கியதில் கணேசன் காயமடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் 18-ந் தேதி அதிகாலையில் கணேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை வழக்காக மாற்றி குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ளார்களா? என போலீசார் ஆய்வு செய்தனர்.

கொள்ளையன் கைது

இந்த பரபரப்புக்கு இடையே கொட்டில்பாடை சேர்ந்த கவாஸ்கர் (25) என்பவரை இந்த வழக்கு தொடர்பாக நேற்று தனிப்படையினர் முட்டம் பகுதியில் கைது செய்தனர். பிறகு போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கணேசனை கொன்று கோவிலில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.

மேலும் அவரிடமிருந்து குத்துவிளக்குகள் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட கவாஸ்கரை போலீசார் நேற்றிரவு இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

13 வழக்குகள்

கைதான கவாஸ்கர் மீது இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குளச்சல் போலீஸ் நிலையத்தில் திருட்டு, கொலை முயற்சி, போக்சோ உள்பட 10 வழக்குகளும், கோட்டார் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவாகி உள்ளன. அதே சமயத்தில் இவர் மீது குளச்சல் போலீஸ் நிலையத்தில் குற்ற சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story