வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்-துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
பொதுக்கூட்டம்
கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திருவிகாவை கடத்திய தி.மு.க.வினரை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலுச்சாமிபுரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் திருவிகா வரவேற்புரை ஆற்றினார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், துணை பொது செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளருமான தங்கமணி, அமைப்பு செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவமரியாதை
கூட்டத்தில்முன்னாள் அமைச்சரும், துணை பொது செயலாளருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- அரசியலில் ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வுக்கு அடித்தளமாக அமையும். எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதால் அ.தி.மு.க. என்ற இயக்கம் உருவானது. ஜெயலலிதாவை சட்டசபையில் தி.மு.க.வினர் அவமரியாதை செய்ததால் அடுத்த தேர்தலில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக அதே சட்டமன்றத்திற்குள் சென்றார்.
அது போன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆள் கடத்தல் சம்பவம் மற்றும் அதையொட்டி நடைபெறும் இந்த கூட்டம் அ.தி.மு.க.வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வருவார் என்பதற்கு இந்த கூட்டம் அடித்தளமாக அமையும் என்பதை காட்டும் வகையில் உள்ளது.
மின்சாரத்துறை
செந்தில்பாலாஜியை தி.மு.க.வில் சேர்க்கும் போதே மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செந்தில்பாலாஜி எதையோ செய்திருக்கிறார். இதன் காரணமாக தான் அவரை சட்டமன்ற வேட்பாளராகவும் நிறுத்தி உள்ளார். இது அவருக்கும் தெரியும். கொடுத்தவருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். அப்படி கொடுத்த பிறகு மிகவும் சக்தி வாய்ந்த துறையை செந்தில்பாலாஜிக்கு கொடுத்துள்ளார்.
ஒழுங்காக ஆட்சி நடத்தி அது மக்களுக்கு சேவை செய்யும் துறை தான் மின்சார துறை. இந்த துறையை தன்னை விட மூத்த அமைச்சர்களிடம் கொடுத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் தனது கட்டுப்பாட்டில் உள்ள செந்தில்பாலாஜியிடம் கொடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். செந்தில்பாலாஜியின் செயல்பாடுகளால் தான் கரூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்ற நிலை உருவாக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டால் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை பெற்று கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.