கட்டிட தொழிலாளி கொலையில் விவசாயி கைது


கட்டிட தொழிலாளி கொலையில் விவசாயி கைது
x

நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலையில் விவசாயி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலையில் விவசாயி கைது செய்யப்பட்டார்.

கட்டிட தொழிலாளி

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 58). கட்டிட தொழிலாளி.

இவர், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தைச் சேர்ந்தவரும், தற்போது லட்சுமிபுரத்தில் வசித்து வருபவருமான விவசாயி கணேசனிடம் (55) செலவுக்கு பணம் கடன் வாங்கி இருந்தாராம். பின்னர் பணத்தை திருப்பி தராமல் ராஜா காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

நேற்று முன்தினம் இரவில் லட்சுமிபுரத்தில் உள்ள கோவில் அருகில் நின்ற ராஜாவுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கணேசன் உருட்டு கட்டையால் ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணேசனை தேடி வந்தனர். இந்த நிலையில் செய்துங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த கணேசனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான கணேசன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பணத்தை திருப்பி தராததால்...

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா என்னிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் அவர் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுதொடர்பாக சம்பவத்தன்று எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அவரை உருட்டு கட்டையால் தாக்கியதில் இறந்தார்.

இவ்வாறு கணேசன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story