முடக்கப்பட்ட குரும்பூர் கூட்டுறவு வங்கியில்சேமிப்பு, வைப்புத் தொகை விரைவாக திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முடக்கப்பட்ட குரும்பூர் கூட்டுறவு வங்கியில் சேமிப்பு, வைப்புத் தொகை விரைவாக திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

முடக்கப்பட்ட குரும்பூர் கூட்டுறவு வங்கியில் வியாபாரிகளின் சேமிப்பு மற்றும் வைப்பு தொகை விரைவாக திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

சேமிப்பு தொகை

குரும்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மு.பரமசிவன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குரும்பூரை சேர்ந்த வியாபாரிகள் தினமும் ரூ.100 முதல் ரூ.1000 வரை தினசரி சேமிப்பு தொகை வசூலிக்கும் பணியாளர் மூலம் செலுத்தி வந்தோம். இந்த பணத்தை தங்கள் கடைகளில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வந்தோம். இந்த நிலையில் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால், அதன் செயல்பாடு முடக்கப்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகள் தங்கள் சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும், பல வியாபாரிகள் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி உள்ளனர். முதிர்வு காலம் முடிந்தும் அந்த பணத்தையும் எடுக்க முடியவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வியாபாரிகளின் சேமிப்பு மற்றும் வைப்புத் தொகை விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அம்பேத்கர் சிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப் பாட்டம் நடத்தி விட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை. இந்த கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், அம்பேத்கர் நினைவு பூங்கா பெயரை கிராம வருவாய் கணக்கில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தியாகி கக்கன் திறந்து வைத்த அம்பேத்கர் நினைவு பூங்கா கல்வெட்டை மீண்டும் பூங்காவில் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை செயலாளர் பாதிரியார் ஜெயந்தன் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், உலக கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையும், பக்தி நாளுமான ஏசு கிறிஸ்து இறப்பு நாளான புனிதவெள்ளி அன்று மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

வீட்டுமனை பட்டா

கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், மூப்பன்பட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டு 159 வீட்டுமனை பிரிவுகள் அங்கீகாரம் செய்யப்பட்டது. அதில் 155 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா 2000-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில் யாரும் இதுவரை வீடு கட்டி குடியிருக்கவில்லை. எனவே, அந்த பட்டாவை ரத்து செய்து மூப்பன்பட்டியில் வீடு இல்லாமல் இருக்கும் தகுதியான பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஆ.சக்திவேல் முருகன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர் சுடலைமாடன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். மேலும், அரசு சார்பில் இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆம்புலன்சு

தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் முத்தையாபுரம்- முள்ளக்காடு பகுதி தலைவர் த.தனராஜ் தலைமையில் வியாபாரிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், முத்தையாபுரம்- முள்ளக்காடு பகுதியில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 1,000 கடைகளுக்கு மேல் உள்ளன. இந்த பகுதியில் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்சு வாகனத்துக்கு தகவல் தெரிவித்தால் தூத்துக்குடி அல்லது ஆத்தூரில் இருந்து வருவதற்கு தாமதமாகிறது. எனவே, இந்த பகுதியில் ஆம்புலன்சு வாகனம் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஓட்டப்பிடாரம் வட்டம் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனை நிலத்தில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிலர் போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story