ஈரோடு, திருப்பூா், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்தொழிற்சாலை சுத்திகரிப்பு நீரை கடலில் கலக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
ஈரோடு, திருப்பூா், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் சுத்திகரிப்பு நீரை குழாய் மூலமாக கொண்டு சென்று கடலில் கலக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு, திருப்பூா், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் சுத்திகரிப்பு நீரை குழாய் மூலமாக கொண்டு சென்று கடலில் கலக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்கூட்டம்
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் வெள்ளி விழா பொதுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் சந்திரசேகரன் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையையும், பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு கலந்துகொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாட் வரி விதிப்பு தள்ளுபடி செய்யக்கோரி அளித்த மனுவை ஏற்று, பழைய வரிகளுக்கு சமாதான திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வது. இதனை விரைவில் அரசு ஆணையாக வெளியிட வேண்டும்.
* லாரி நிறுவனங்களில் ஏற்பட்ட தொழிலாளர் கூலி உயர்வு பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண முழு முயற்சி எடுத்த தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
மின்சாரத்துக்கு மானியம்
* ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு விரைவில் வழங்கப்பட வேண்டும்.
* டெக்ஸ்டைல் பிரிண்டிங் மில்களில் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்துவதற்கு 100 யூனிட் மின்சாரத்துக்கு மானியம் வழங்க வேண்டும்.
* கடந்த 2007-ம் ஆண்டு ரூ.700 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட ஈரோடு, திருப்பூா், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை சுத்திகரிப்பு நீரை குழாய் மூலமாக ராமநாதபுரம் வழியாக கடலில் கலக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* புதிய கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை குறைந்த வைப்பு தொகை மற்றும் குறைந்த வாடகையில் சிறு வியாபாரிகளுக்கே ஒதுக்கி தர வேண்டும்.
80 அடி சாலை
* ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு ரெயில் நிலையத்தையும், மீனாட்சி சுந்தரனார் சாலையையும் இணைக்கும் வகையில் 80 அடி சாலையை திறக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் கூட்டமைப்பு துணைத்தலைவர்கள் தனபாலன், சண்முகசுந்தரம், இணைச்செயலாளர்கள் மூர்த்தி, ஜெப்ரி, ஒருங்கிணைப்பாளர் துரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.