கழுகுமலையில்ஒரு மணி நேரம் பலத்த மழை
கழுகுமலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கழுகுமலை:
கழுகுமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இளநீர், நுங்கு, மோர், பழரசம், தர்பூசணி பழங்கள் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை களை கட்டியது.
இப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. நகரில் 20 நாட்களுக்கு ஒரு முறை குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.12-க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. திடீரென்று மாலை 3.45 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணிநேரம் பெய்த மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இது ெபாதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.