பட்டாசு ஆலை வெடி விபத்தில்2 தொழிலாளர்கள் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.. 2 பெண்கள் தீக்காயத்துடன் தப்பினர்.
சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.. 2 பெண்கள் தீக்காயத்துடன் தப்பினர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காரநேசன் காலனியை சேர்ந்தவர் பிரவீன்ராஜா (வயது 55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆனையூர் கிராமத்தில் இயங்கி வந்தது.
நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலை, 40 அறைகளுடன் செயல்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டனர்.
2 பேர் பலி
புஸ்வாணம் மற்றும் சங்கு சக்கரம் வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்த அறையில் உராய்வு காரணமாக திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த அறை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே மற்ற அறைகளில் இருந்த தொழிலாளர்கள், அங்கிருந்து ஓடினார்கள்.
வெடிவிபத்து நடந்த அறையில் பணியாற்றி வந்த மாரநேரி இடையன்குளத்தை சேர்ந்த பிச்சை மகன் கருப்பசாமி (28), வெள்ளைச்சாமி மகன் தங்கவேலு (65) ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு அறையில் வேலை செய்துவந்த விளாம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்த வடக்கத்தியான் மனைவி கருப்பம்மாள் (50), ஏ.துலுக்கப்பட்டியை சேர்ந்த ரவி மனைவி மாரித்தாய் (45) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உடல்கள் மீட்பு
இந்த வெடிவிபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
மேலும் வெடி விபத்தில் உடல் கருகி இறந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்து நடந்த இ்டத்தை தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளுக்கான தனி தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இ்ச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.