கேர்மாளம் வனப்பகுதியில்பள்ளத்தில் தவறி விழுந்த காட்டு யானை சாவு
கேர்மாளம் வனப்பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த காட்டு யானை உயிரிழந்தது.
தாளவாடி
கேர்மாளம் வனப்பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த காட்டு யானை உயிரிழந்தது.
காட்டு யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனச்சரகம் கேர்மாளம். இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மலைச்சரிவில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர்.
உடனே அவர்கள் இதுகுறித்து வனச்சரகர் தினேசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனச்சரகர் தினேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.
பள்ளத்தில் தவறி விழுந்து...
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்தது 30 வயது உள்ள பெண் யானை ஆகும். யானையின் வயிறு பெரிதாக இருக்கிறது. இதனால் யானை கருவுற்று இருக்கலாம். அந்த பகுதியில் உள்ள ஓடையில் தண்ணீர் குடித்துவிட்டு மலைச்சரிவில் ஏறி சென்று கொண்டிருக்கும்போது பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்,' என தெரிவித்தனர். எனினும் பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் எப்படி இறந்தது என்பது தெரியவரும்.